பயணங்கள் முடிவதில்லை - 2 டெல்லி

8:12 PM Posted by mayil

டெல்லி - இரவில் மிக அழகான ஊர், எங்கும் விளக்கொளியில் நனையும் தெருக்களும், கட்டிடங்களும், எதையோ துரத்தி ஓடும் வாகனங்களும், அந்த நேரத்தில் கூட அலங்காரம் கலையாத பெண்களும், உற்சாகமான இளைஞர்கள் .... பார்க்க நல்லத்தான் இருந்தது.

முதல் நாள் டெல்லி லோக்கல் சுற்றுபயணம். எல்லா ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யபட்டிருந்தது. முதலில் குதுப்மினார், இண்டியா கேட், பஹாய் லோட்டஸ் டெம்பிள், இந்திரா காந்தி இல்லம், நேரு இல்லம், செங்கோட்டை, காந்தி சமாதி, பிர்லா மந்திர்.

குதுப்மினார், இது மட்டுமல்ல அங்குள்ள அனைத்து கட்டிடங்களுமே முகலாயர்கள் வாழ்க்கையின் மிச்சங்கள். எங்கும் எதிலும் பிரமாண்டம். மன்னர்கள் வாழ்க்கையின், சுகம், வீரம், போட்டி, அழிவு, காதல், வாழ்க்கை முறை, சதி, தோல்வி, எல்லாவற்றையும் கூறும் வரலாற்று சான்றுகள். கண்டிப்பாக எல்லோரும் ஒரு முறை ஏனும் காண வேண்டிய இடங்கள். இதை நம் அரசாங்கம் முடிந்த அளவு பராமரித்தாலும் நம் மக்கள் அவர்கள் கைவரிசையை அங்கங்கே காட்டுகிறார்கள். எல்லா இடத்திலும் நுழைவு கட்டணம் இந்தியர்களுக்கு பத்து ரூபாய் என்றால் மற்றவர்களுக்கு 250 ரூபாய். காமிரா, வீடியோ கட்டணம் தனி. குதுப்மினார் கிட்டத்தட்ட 350 படிகளுடன் ஐந்து அதுகள் கொண்ட ஒரு கட்டிடம். அதை சுற்றிலும் இடிபாடுகளுடன் கூடிய ஒரு மாளிகை, அதே போல் கட்ட முயன்று பாதியில் விட்ட ஒரு குதுப்மினார், மற்றும் அசோகர் தூண்.

இண்டியா கேட் : போரில் மரணம் அடைந்த வீரர்களுக்கு உள்ள நினைவு ஜோதி. அங்கு நின்று அந்த நாட்களை நினைவு கூறும் போது தியாகத்தின் வீரியம் உணரமுடியும். ஒரு கோவிலுக்கு போனது மாதிரி இருந்தது.

பஹாய் லோட்டஸ் டெம்பிள் : ஒரு அழகிய கட்டிட கலை மற்றும் தியான மண்டபம்,

இந்திராகாந்தி இல்லம் : ஒரு இறுக்கமான மனநிலையுடன் மட்டுமே இங்கிருந்து வெளி வர முடியும். அவர் பயன்படுத்திய அறைகள், புத்தகங்கள், பதக்கங்கள், விருதுகள், முக்கியமான நிகழ்வுகளின் புகைபடம், திருமண புடவை என்று எல்லாமே காட்சிக்கு. அதிலும் அவர் கொலை செய்யப்பட அன்று அணிந்திருந்த புடவை, செருப்பு ரத்த கரையின் மிச்சத்துடன்....

அடுத்தது ராஜீவ்காந்தியின் நினைவு இல்லம், அவரும் சோனியா காந்தியும் குழந்தைகளுமான புகைப்படங்கள், அவரின் படுகொலை நடந்த போது அணிந்திருந்த ஆடைகள்.... பார்க்கவே முடியவில்லை. ஒரு குடும்ப தலைவனாக அவரை இழந்த குடும்பத்தாரின் வலி.... எது எப்படி இருந்தாலும் இந்திரா காந்தியின் குடும்பத்தினரின் தியாகம் வேறு எதை கொண்டும் நிரப்ப முடியாதது.
அதே போல் நேரு நினைவு இல்லமும் பாரமரிக்க படுகிறது. அங்கே இந்த மூவருக்கும் அணையா விளக்கு உள்ளது.

செங்கோட்டை : பாதிக்கும் மேல் ராணுவ கட்டுபாட்டில், இதே போல் தான் ஆக்ரா கோட்டையும் உள்ளதாம். அக்பர் அவர் தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றிய போது கட்டியதால், இரண்டும் ஒன்று போல் இருக்கிறது. இங்கு பிக்பாக்கெட் அடிப்பவர்கள் மிக மிக அதிகம். அதே போல் இங்கு உள்ள கடைகளின் கூட திருட்டு அதிகம். பிச்சைகாரர்கள், புகைபடம் எடுப்பவர்கள் என்று இம்சை தாங்க முடியாது.

காந்தி சமாதி : இங்கே ஒரு அற்புதமான காட்சி, மாலை 5 மணிக்கே இருட்டிவிடுவதால் 7 மணிக்கு நள்ளிரவு மாதிரி இருந்தது. காந்தி சமாதியில் அந்த நேரத்தில் எங்கள் குழுவினர் மட்டுமே இருந்தோம், நான் மட்டும் முன்னாடியே நடந்து போய்விட்டேன். அங்கே போனால் அந்த இரவில் அங்கே யாருமே இல்லை, நானும் காந்தியும் மட்டுமே, மலர் அலங்காரத்துடன் எப்போதும் எரியும் ஜோதியுடன் அந்த இடமே பார்க்க ஒரு தியான மண்டபம் மாதிரி இருந்தது. மற்றவர்கள் வர 15 நிமிடம் ஆனதால், அந்த தனிமையும், இருட்டும், குளிரும், காந்தி சமாதியும் அமைதியும் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவானது. பிரதமர் கூட இப்படி அஞ்சலி செலுத்தியிருக்க மாட்டார். ஜெய் ஹிந்த்.

கடைசியா பிர்லா மந்திர்,; என்னமோ இங்க இருக்கிற சாமிய பார்த்த பக்தியே வரலை. கொலு பொம்மை பார்க்கிற மாதிரி இருந்தது. சுண்டலும் இல்லை, பூசாரி வேற தெலுங்கு படத்தில் வர வில்லன் மாதிரியே இருந்தார். ஒரு சல்யுட் வச்சுட்டே விடு ஜுட் டு ஹோட்டல்.

நாளைக்கு காலையில் ஜெய்பூர் போகணும்... அங்க பார்க்கலாம்.